செய்திகள்

கல்லூரி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் கைது

ஆரணி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி:

ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் ஆரணியை அடுத்துள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

குண்ணத்தூரை சேர்ந்த சேகர் மகன் சிவா (23). இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் தினசரி பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். சிவா தினமும் மாணவி வசிக்கும் கிராமத்துக்கு பணம் வசூலிக்க சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து சில நாட்களில் மாணவி திருமணம் செய்து கொள்ளும்படி சிவாவை வலியுறுத்தி உள்ளார். அப்போது அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, மாணவியையும் தரக்குறைவாக திட்டி உள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் கடந்த மாதம் 1-ந் தேதி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி விசாரணை நடத்தினார். அதில், மாணவிக்கு 18 வயது நிரம்ப 2 மாதங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பேபி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிக்கு 18 வயது நிரம்பியதும் அவரை, சிவா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இதனை ஏற்றுக்கொண்டு சிவா குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவா அவரது அண்ணன் கார் டிரைவர் முருகன், காரின் உரிமையாளர் மணி ஆகியோர் மாணவியின் வீட்டின் முன்பாக நின்று தரக்குறைவாக பேசி உள்ளனர்.

அப்போது சிவா ‘மாணவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அதையும் மீறி யாராவது வற்புறுத்தினால் மாணவி மற்றும் குடும்பத்தினரை ஒழித்து விடுவேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ஆரணி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிவாவை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய முருகன், மணி ஆகியோரை தேடி வருகிறார்கள்.