நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அடுத்த பெரியமோட்டூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜின் மகன் மெய்யரசன் (வயது12). இவர், கேதாண்டப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் 16-ந் தேதி மதியம் பள்ளியில் காலாண்டு தேர்வு எழுதுவதற்காக மெய்யரசன் பள்ளிக்கு சென்றார்.
பள்ளிக்கு செல்லும் வழியில் வகுப்பு மாணவர்கள் சிலருடன், பெருமாள் கோவில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தரை கிணற்றில் மெய்யரசன் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் மாணவரின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக நாட்டறம்பள்ளி போலீசில் மோகன்ராஜ் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் விசாரணையை தீவிரப்படுத்தினார். இந்த நிலையில், நேற்று காலை கேத்தாண்டப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், குப்பகாரவட்டம் கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (18) என்பதும், வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பதும் தெரியவந்தது. சம்பவம் நடந்த 16-ந் தேதி காலை கேத்தாண்டப்பட்டி அருகே கிணற்றில் நண்பர்களுடன் சக்திவேல் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த பள்ளி மாணவர் மெய்யரசனுக்கு, சக்திவேல் நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி ஆழமான பகுதியில் மெய்யரசனை குதிக்கச் செய்துள்ளார். இதில் மெய்யரசன் நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.