நாகர்கோவில்:
தக்கலை அருகே புலியூர் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா, (வயது 19).
ஆதிரா, அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி, கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை பேசி, முடிவு செய்யப்பட்டது.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. அதற்கு முந்தைய நாள் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு ஆதிரா வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர், வீடு திரும்பவில்லை. ஆதிராவை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து ஆதிராவின் பெற்றோர் தக்கலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிராவை தேடி வந்தனர். இந்நிலையில் ஆதிரா, நேற்று தக்கலை போலீசில் தஞ்சமடைந்தார்.
அவருடன் தக்கலை ராமன் பரம்பைச் சேர்ந்த வாலிபர் நிஷாந்த் (22) என்பவரும் இருந்தார்.
தக்கலை போலீசில் ஆதிரா, கூறும்போது, நானும், நிஷாந்த்தும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எனக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். அதுபிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றேன்.
நாங்கள் திருச்செந்தூர் சென்று கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆதிரா-நிஷாந்த் ஜோடி போலீசில் தஞ்ச மடைந்ததை தொடர்ந்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸ் நிலையம் வந்த அவர்களிடம் போலீசார் இருவரும் திருமணம் செய்த தகவலை கூறினர். ஆனால் ஆதிராவின் பெற்றோர் அவரை ஏற்க மறுத்தனர். நிஷாந்த்தின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.