செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி மீது விசாரணை கமி‌ஷன் - கல்லூரி செயலாளர் அறிவிப்பு

பேராசிரியை நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி செயலாளர் ராமசாமி கூறினார்.

மாலை மலர்

பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பேச்சு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரியின் செயலாளர் ராமசாமி இதுபற்றி கூறியதாவது:-

மாணவிகளிடம் பாலியல் வற்புறுத்தல் குறித்து 3 மூத்த பேராசிரியர்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி என்னிடம் அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் நிர்மலா தேவி தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டு குறித்து நிர்மலாதேவி பதில் அளிக்க கூறி உள்ளோம். பதில் கிடைத்தவுடன் கல்லூரி அளவில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவ-மாணவிகளின் நலன் பாதுகாக்கப்படும் அளவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழகத்தில் புகழ்மிக்க பல்கலைக்கழகம் ஆகும். இந்த புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற சம்பவங்கள் கூறப்படுகிறது.

தனியார் கல்லூரி பேராசிரியையின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழக சிண்டிகேட் துணை கமிட்டி அளவிலான விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

கடந்த மாதமே இந்த புகார் பல்கலைக்கழகத்திற்கு வந்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பேராசிரியை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மானிய குழுவின் நிதிகளை பெறுவதற்காக சில முறைகேடுகளை அரங்கேற்றம் செய்யும் முயற்சியாக இது இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியை மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.