திருவனந்தபுரம்:
மலையாள டைரக்டர் ஒமர் லுலு இயக்கிய ஒரு அடார் லவ். இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. இதில் மாணிக்க மலராய பூவே என்ற பாடலில் துணை நடிகையான கல்லூரி மாணவி பிரியா வாரியர் நடித்திருந்தார்.
இதில் காதலனை பார்த்து பிரியா வாரியர் கண் சிமிட்டி, புருவங்களை அசைத்து, முகத்தில் காதல் ரசம் ததும்ப பாவனை காட்டுவார். 30 வினாடிகள் ஓடும் இக்காட்சி இணையத்தில் வெளியானதும், பல லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.
இதன் மூலம் பிரியா வாரியர் கால்பந்து வீரர் ரொனால்டோ, ஆலிவுட் நடிகைக்கு அடுத்தபடியாக இணையத்தில் அதிக லைக்குகளை அள்ளியவர் என்ற பெயரை பெற்றார். படமே வெளியாகாத நிலையில் பிரியா வாரியருக்கு கிடைத்த புகழ் படக்குழுவை பிரமிக்க வைத்தது.
பிரியா வாரியரின் முக அசைவுக்கு வரவேற்பு கிடைத்தது ஒருபுறம் என்றால் அவர், நடித்த பாடலின் அர்த்தம் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் புகார் கூறினர்.
இது தொடர்பாக ஐதராபாத் போலீசிலும் புகார் செய்துள்ளனர். போலீசார் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கி உள்ளனர். இதுவும் பாடலுக்கான தேடலை அதிகரித்துள்ளது.
ஒரே நாள் இரவில் புகழின் உச்சிக்கு சென்ற பிரியாவாரியர், திருச்சூரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஒரு அடார் லவ் படத்தில் நடிப்பதற்காக கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று படப்பிடிப்புக்கு சென்றார். இப்போது அவர், சர்வதேச அளவில் புகழ் பெற்றது கல்லூரி நிர்வாகத்தை வியப்பில் ஆழ்த்தியது.
கல்லூரியின் முதல்வராக உள்ள கன்னியாஸ்திரி மரியேட்டிக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே மாணவி பிரியா வாரியருக்கு பாராட்டு செய்தி அனுப்பினார். மேலும் அவரை சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
மாணவி பிரியா வாரியர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் வந்து என்னை சந்தித்தார். மலையாள படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனவும் கேட்டார். முக்கிய பாடங்களுக்கான வகுப்புகளுக்கு வந்து விட வேண்டும், கூடுதல் விடுமுறை எடுக்கக்கூடாது, விதிகளுக்கு மீறி விடுப்பு தர மாட்டோம் என்ற கட்டுப்பாடுகளின் பேரில் அவருக்கு அனுமதி கொடுத்தோம்.
அவர் நடித்த சில காட்சிகள் பல லட்சம் பேரை கவர்ந்ததாக எனக்கு நேற்றுதான் தகவல் கிடைத்தது. முக்கிய அலுவல்கள் இருந்ததால் உடனடியாக பிரியாவாரியரை சந்திக்க முடியவில்லை. இப்போது அவரை நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல ஆர்வமாக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews