ஆர்.எஸ் .மங்கலம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் வீர ராகவராவ் பார்வையிட்ட காட்சி. 
செய்திகள்

ஆர்.எஸ் .மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் வீர ராகவராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாலை மலர்

ஆர்.எஸ்.மங்கலம்:

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் .மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் வீர ராகவராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து வந்த நபர்களை சுகா தாரத் துறையினர் கண்டறிந்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ள நபர்களின் பதிவேடுகளைபார்வையிட்டார்.

இதுபோல் பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் தனிமை படுத்தி வைத்துள்ள நபர்களின் பதிவேடுகளை தாலுகா வாரியாக மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்ட பதிவேடு கணக்குடன் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தார்.

பின்பு சம்பந்தப்பட்ட நபர்களை செல்போன் மூலமாக அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்துகண்காணிக்க வேண்டும் என ஆர்.எஸ். மங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுகந்தி போசுக்கு உத்தரவிட்டார்.

ஆஸ்பத்திரியில் கிருமிநாசினி மற்றும் சானி டேரியன் போன்ற பொருட்கள் போது மானதாக உள்ளதா என அதிகாரியிடம் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து கலெக்டர் வீரராகவ ராவ் நேரடிப்பார்வையில் ஆர்.எஸ் .மங்கலத்தில் மக்கள் அதிக நடமாட்டமுள்ள சேதுபதி பஸ் நிலையம், கைலாசநாதர் கோவில், கடைவீதிகள் போன்ற முக்கிய பகுதிகளில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அருளாந்து மற்றும் தீயணைப்பு படையினர் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பின்பு மாவட்டத்தின் எல்லையான ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் அருகே அமைக்கப்பட்டுள்ள போலீசாரின் சோதனை சாவடியை பார்வையிட்டார்.

அங்கு வாகனங்களின் எண்களை போலீசார் பதிவேட்டில் பதிவு செய்தார்களா என்பதை ஆய்வு செய்து போலீசாருடன் சுழற்சி முறையில் எட்டு மணி நேரத்துக்கு ஒரு தலையாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா என்பதை தாசில்தார் சாந்தியிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வில் ஆர்.எஸ் மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் மெய்ம்மொழி, இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.