செய்திகள்

ஆந்திராவுக்கு கரும்பு கடத்தினால் நடவடிக்கை: கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை

ஆந்திராவுக்கு கரும்பு கடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2017-2018-ம் ஆண்டுக்கான அரைவை பருவம் கடந்த 2-ந் தேதி முதல் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்துள்ள கரும்பை, ஆந்திரா மாநிலம் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கடத்தி செல்ல சில இடைதரகர்கள் திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

ஆலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கரும்பை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை, போக்குவரத்துத் துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை மற்றும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அலுவலர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்தகுழு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள பொன்பாடி, சிவாடா, பள்ளிப்பட்டு, நொச்சிலி, ஊத்துக்கோட்டை மற்றும் சின்ன ஓபுலாபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்படும் சுங்கச்சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

சுங்கச்சாவடிகளில் ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் கண்காணிப்பு பணிக்கு ஈடுபடுத்த சம்மந்தப்பட்ட துறையினர் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வின் போது கரும்பு கடத்தப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக 8489916647 என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் கிடைத்த உடன் சம்மந்தப்பட்ட துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட கரும்பை ஆலை அரைவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக கரும்பு கடத்தலில் ஈடுபடு வோர் மீது கரும்பு கட்டுப் பாட்டு ஆணையின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகனம் பறிமுதல் செய் யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.