குளத்தை ஆய்வு செய்த கலெக்டர் சிவன்அருள் 
செய்திகள்

கழிவுநீர் குட்டையை குளமாக மாற்றும் பணி- கலெக்டர் சிவன் அருள் ஆய்வு

திருப்பத்தூரில் ரூ.13 லட்சம் செலவில் குட்டையில் இருந்து கழிவுநீரை வெளியேற்றி, அதை தண்ணீரை சேமிக்கும் குளமாக மாற்ற நடந்து வரும் பணியை கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் டி.எம்.சி. காலனி உள்ளது. அந்த மெயின்ரோடு அருகில் பூமிக்கடியில் இருந்து தானாக ஊற்று ஏற்பட்டு, வெளியேறிய தண்ணீர் அந்த இடத்தில் குட்டைபோல் தேங்கியது. நாளடைவில் அந்தத் தண்ணீர் கழிவுநீராக மாறியது. அதில் பல ஆண்டுகளாக பன்றிகள் முகாமிட்டு கிடந்தன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

அப்பகுதி மக்கள், கழிவுநீர் குட்டையை சீரமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் கலெக்டர் சிவன்அருள், அந்தக் குட்டையை நேரில் பார்வையிட்டு, அதை உடனடியாக சீரமைக்க நகராட்சிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ரூ.13 லட்சம் செலவில் குட்டையில் இருந்து கழிவுநீரை வெளியேற்றி, கழிவுநீர் உள்ளே வராமல் தடுத்து, அதை தண்ணீரை சேமிக்கும் குளமாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

அந்தப் பணியை கலெக்டர் சிவன்அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் ராஜரத்தினம், பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், துப்புரவு ஆய்வாளர் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.

கழிவுநீர் குட்டை, தண்ணீரை சேமிக்கும் குளமாக மாற்றப்படுவதால், அதைச் சுற்றி உள்ள பல தெருக்களின் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றில் நீர் மட்டம் உயரும், தண்ணீர் பிரச்சினை இருக்காது. கழிவுநீர் குட்டை, குளமாக மாற்றப்படுவதால் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.