பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா 
செய்திகள்

நெய்யப்படாத கைப்பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் ஒன்றான நெய்யப்படாத கைப்பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

பெரம்பலூர்:

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது. அதில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அளவிலான தடையை அரசு அறிவித்தது. அதில் பாலிப்புரப்பிலீன் மற்றும் பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் பைகளும் (தடிமன் வேறுபாடின்றி) அடங்கும்.

பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்கு அறிந்தனர். அதே சமயத்தில் பாலிப்புரப்பிலீன் பைகள் (நெய்யப்படாத கைப்பைகள்), அமைப்பு, வண்ணம் மற்றும் இயல்பில் துணிப்பைகள் போலவே இருப்பதால், அதை துணிப்பை என மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆகவே நெய்யப்படாத கைப்பைகளும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களே ஆகும்.

ஆங்கில புத்தாண்டு முதல் தமிழகம் தனது பயணத்தை “பிளாஸ்டிக் மாசில்லா“ மாநிலமாக தொடங்கப்பட்டிருந்தாலும், இவ்வகை நெய்யப்படாத கைப்பைகள் இனிப்பங்காடி, மருந்தகம், உணவகம், துணி கடைகளில் துணிப்பைகள் என தவறாக கருதப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இது போன்ற பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகித பைகளை பொதுமக்கள் உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews