பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாரணமங்கலம் மற்றும் காரை ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். அதன்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிகள் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து அவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படும் சத்துணவு மையத்தையும், காய்கறி தோட்டத்தையும் ஆய்வு செய்தார். மேலும் நாரணமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும், மேலும் மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை அதிகப்படுத்தும் வகையில் புரொஜெக்டர் மூலம் பாடங்கள் கற்பிக்கும் முறைகள் குறித்தும் விரிவாக கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து காரை அரசு வட்டார மருத்துவமனையை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் சாந்தா நாரணமங்கலம் மற்றும் காரை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலையரசன் (காரை), பத்மாவதி (நாரணமங்கலம்) உள்பட பலர் உடனிருந்தனர்.