நாமக்கல்:
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொட்டணம் ஊராட்சியில் வளர்ச்சி தி்ட்ட பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடக்கமாக பொட்டணம் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காத்திருப்போர் அறை கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு தங்குபவர்களுக்கு தேவையான கழிப்பறை, குளியலறை வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தார்.
மேலும் இந்த கட்டிடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பொட்டணம் ஊராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக கட்டப்பட்ட 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி தற்போது தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்று கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொட்டணம் ஊராட்சியில் கனிமம் மற்றும் சிறுகனிமம் நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள், சாலைப்பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பராஜன், ஜெயக்குமரன், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மணிமாலா சின்னச்சாமி, பொட்டணம் ஊராட்சி தலைவர் பிரபாகரன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.