திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தனிநபர் கழிப்பிடம் கட்டிக்கொடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், திருநங்கைகள், தீ, வெள்ளம் போன்ற இயற்கை இடர் பாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.
அதன்படி இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் இதுவரை 1,546 பேருக்கு ரூ.27 கோடியே 82 லட்சம் மதிப்பில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.