ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக் கிணங்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள், உள்ளாட்சித் துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன், வாரச்சந்தை போன்ற இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு செயல்படா நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் கூட்டம் நடத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியும் சாத்திய கூறுகள் உள்ள இடங்களில் வீட்டிலிருந்தே பணிபுரிய வழிவகை செய்யும் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் வகையில் அமைந்துள்ள பெரிய அளவிலான துணிக் கடைகள், நகைக் கடைகள், வாராந்திர சந்தைகள் ஆகியவற்றை அடுத்த பதினைந்து நாட்கள் வரை திறக்காமல் மூடிய நிலையில் இருந்து ஒத்துழைக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறது.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு நல்கி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் கூட்டு பிரார்த்தன தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டபடி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலயம், ரத்தனகிரி சுப்ரமண்யா ஆலயம், திருப்பாற்கடல் பெருமாள் கோவில், திமிரி பாலதண்டாயுதபாணி ஆலயம் மேலும் மாவட்டத்தில் உள்ள பிற வழிபாட்டுத்தலங்கள் தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூட வேண்டும் மற்றும் கோவில் விழாக்கள் நடத்திட அரசிடம் இருந்து அறிவிப்பு வரும்வரை நடத்தாமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசின் மூலமாக மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் அடுத்த 15 நாட்களுக்கு தேவையற்ற வகையில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே தங்கியிருந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெளியில் அனுப்பாமல் பாதுகாத்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.