வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி மாரியம்மாள். 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். மிகவும் ஏழ்மையான நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுடைய மகள் சரண்யா. கண்பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளியான இவர் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத் தேர்வில் 404 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அதன்பின் தென்னாங்கூர் அரசு கலை கல்லூரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க சென்ற போது 10-ந் தேதியே விண்ணப்பங்கள் பதிவு முடிந்து விட்டதை அறிந்தார்.
அதைத்தொடர்ந்து தான் கல்லூரியில் சேர்ந்து படிக்க கலெக்டர் உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது. அதை பார்த்த கலெக்டர் கந்தசாமி, மாணவியை கல்லூரியில் சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், வந்தவாசியில் உள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாணவி சரண்யாவை சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்பேரில் இக்கல்லூரியில் பி.காம் 3 ஆண்டுகள் படிப்பதற்கான செலவுகளை கல்லூரி நிர்வகமே ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில் நேற்று வந்தவாசிக்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாணவியை அந்த கல்லூரிக்கு அழைத்து சென்று கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான உத்தரவினையும், தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் மாணவிக்கு தேவையான துணிமணிகள் ஆகியவற்றை மாணவியிடம் வழங்கினார். அப்போது கல்லூரி தலைவர் பி.முனிரத்தினம், கல்லூரி செயலாளர் எம்.ரமணன், செய்யாறு உதவி கலெக்டர் கி.விமலா, வந்தவாசி தாசில்தார் கே.ஆர்.நரேந்திரன் ஆகியயோர் உடன் இருந்தனர்.
பின்னர் வந்தவாசி தாலுகா பழவேரி கிராமத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவிற்காக கட்டப்பட உள்ள பெட்ரோல் நிலையத்திற்காக நடந்த பூமி பூஜையில் கலெக்டர் கலந்து கொண்டார். மீசநல்லூர் கிராமத்தில் இருளர் குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும் 100 வீடுகள் கொண்ட மாதிரி கிராமத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் பா.ஜெயசுதா, தெள்ளார் ஒன்றிய ஆணையாளர்கள் பா.காந்திமதி, ரா.குப்புசாமி, தெள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தன், ஒன்றிய பொறியாளர்கள் செல்வராஜ், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.