செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய தாலுகாவை சேர்ந்த பொதுமக்களின் குறைதீர்வு கூட்டம் முதல்முறையாக நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கி, முதியோர் மாற்றுத்திறனாளி உள்பட சுமார் 2 ஆயிரம் கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.
பின்னர் கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து மனுவின் மீதான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ஒவ்வொ திங்கட்கிழமையும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுவினை அளித்து தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும், மாவட்ட கலெக்டரை சந்திக்கவும், 90 கிலோ மீட்டர் தொலைவிற்கு மிகவும் சிரமத்துடன் பணம் செலவிட்டு மனுக்களை அளித்து வந்தனர்.
மிகுந்த சிரமத்தின் காரணமாக மாற்றுத் திறனாளிகளும், முதியோர்களும் அரசின் சலுகை பெற வர முடியாததை உணர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் மாதத்தில் 2 முறை திங்கட்கிழமை செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படும்.
இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் செய்யாறில் நடக்கும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திலேயே தங்களின் கோரிக்கை மனுவினை அளித்து தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு உதவி கலெக்டர் விமலா உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்திற்கு வந்த கலெக்டர் கந்தசாமி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு மதிய உணவினை வழங்கினார்.