ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நுகர்வோர் விழிப்புணர்வு, உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மூலம் கொரோனா கிருமி தொற்று காரணமாக முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவுடன் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேற்கண்ட குடும்ப அட்டை தாரர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் ஏப்ரல் மாதத்திற்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக வருகிற 20.4.2020 முதல் 22.4.2020 மூன்று தினங்களில் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர் மூலம் வீடுகளுக்கு நேரடியாக வந்து அதற்கான டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மேற்படி டோக்கனை கொண்டு வந்து சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று இலவச அரிசியை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் மமுதலமைச்சர் அறிவிப்பின்படி, மே மாதத்திற்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (பண்டகமில்லா குடும்ப அட்டை நீங்கலாக) அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களின் உரிம அளவின்படி விலையில்லாமல் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும்.
அப்பொழுது முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை பயனாளிகளுக்கு குடும்ப உறுப்பினர் ஒரு வருக்கு கூடுதலாக வழங் கப்படும் 5 கிலோ அரிசியும் சேர்த்து மே மாதத்தில் வழங்கப்படும். 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், கொரோனா தொற்று நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாலும், இலவச பொருட்களை பெற வரும் அனைத்து மக்களும் வரிசையாக நின்று 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்களைப் பெற்றுச் செல்ல வேண்டும்.