தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் சுகாதாரத்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் கொரோனா பரவல் தடுப்பு குறித்த ஆலோசனைக்கு பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளான அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் ஆகிய நகராட்சி பகுதிகளும், உத்தமபாளையம் பேரூராட்சியில் எந்தவித தளர்வும் கிடையாது.
இந்த 6 நகர் பகுதிகளிலும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும். வைரஸ் தொற்று மீண்டும் மீண்டும் பரவி வருவதால் முற்றிலும் இதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று முதல் அரசு கட்டுமானப்பணிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் இவைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கும் வகையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். வீட்டு வேலை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு உதவியாளர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன், தச்சர் உள்ளிட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளலாம். மத்திய, மாநில அரசு அலுவலங்களில் 30 சதவீத பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.