கோவை:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பலர் கோவையில் போராட்டங்கள் நடத்தினர்.
குறிப்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி அரசு விதிகளை மீறி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பணி நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் கூறிய அவர்கள் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த புகார்கள் குறித்து உயர் கல்வித்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது குறிப்பிட்ட பணி நியமனங்களை ஒத்திவைக்குமாறு உயர் கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்திய பின்னரும் அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பணி நியமன முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் நவம்பர் 22-ந் தேதி அன்று ஒரே நாளில் 82 பேர் பணியமர்த்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணி நியமனங்களுக்கு அன்றைய தினமே சிண்டிகேட் ஒப்புதல் பெறப்பட்டு நியமன ஆணையும் வழங்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பணிநியமன ஆணை கிடைத்த அன்றைய தினமே 47 பேராசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். மறுநாள் (23-ந் தேதி) 5 பேர், 24-ந் தேதி 4, 25-ந் தேதி 4 பேர் என அடுத்தடுத்த 4 நாட்களில் 60 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பணி ஆணை வழங்கப்பட்ட அனைவரும் ஏற்கனவே வேறு கல்வி நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள். இவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்ட அன்றே பணியில் எப்படி சேர்ந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது. ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் இருந்து விலகியதற்கான முறையான ஆவணங்கள் எப்படி சமர்ப்பித்தார்கள்? அவர்களது உடல் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயாராக வைத்திருந்தது எப்படி? என பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
பணிநியமனங்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு துணைவேந்தர் கணபதி சிண்டிகேட் உறுப்பினர்களை கட்டாயப்படுத்தியதாக உறுப்பினர்கள் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பேராசிரியர்கள் பணி நியமனங்களுக்கென்று உள்ள விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது உறுதியாகி இருப்பதால் இதன்பின்னணியில் பெரிய ஊழல் நடந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை அறிக்கையின் அடிப்படையில் துணைவேந்தர் கணபதி மற்றும் பணி நியமனங்களுக்கு பின்னணியில் உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.