கைது 
செய்திகள்

கோவையில் இருந்து கரூருக்கு மாணவியை கடத்திய மாணவர் கைது

கோவையில் இருந்து கரூருக்கு மோட்டார் சைக்கிளில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மாலை மலர்

கோவை:

கோவையை சேர்ந்த பிளஸ்-1 மாணவருக்கும், அதே பள்ளியில் 9- வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த 2 பேரும் திடீரென மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர், அவர்களை பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. தனது மகளை காணாததால் மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை பிளஸ்-1 மாணவர் ஆசை வார்த்தை கூறி தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கரூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் வைத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கரூருக்கு விரைந்து சென்று மாணவரின் பாட்டி வீட்டில் இருந்த மாணவியை மீட்டனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் மாணவியை கடத்தி சென்ற மாணவர் பாட்டி வீட்டில் வைத்து அவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அந்த மாணவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஊரடங்கு காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வாகனங்களில் வெளியூருக்கு செல்பவர்கள் இ-பாஸ் வைத்து இருந்தால் மட்டுமே அவர்களை செல்ல அனுமதிக்கின்றனர். ஆனால் பிளஸ்-1 மாணவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், இ-பாஸ் இல்லாமலும் மாணவியை 3 மாவட்டங்களை தாண்டி கடத்தி சென்றுள்ளார்.

அவர் எப்படி சென்றார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.