கோப்பு படம் 
செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு - கோவையில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பல இடங்களில் கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கோவை:

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் கலவரம் வெடித்தது. தமிழகத்திலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் நஞ்சப்பா ரோடு, பெரியகடை வீதி, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, போத்தனூர், குனியமுத்தூர், கரும்புக்கடை, ஆத்துபாலம் கோட்டை மேடு, உக்கடம், செல்வபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கரும்புக்கடை, போத்தனூர், குனியமுத்தூர், உக்கடம், ஆத்துபாலம், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. கோவை மாவட்ட சுன்னத் ஜமாத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. உக்கடம், கரும்புக்கடை மற்றும் மாநகர் முழுவதும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய அதி விரைவு படை போலீசார் மாநகர் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேற்கு மண்டல போலீசார் அடங்கிய சிறப்பு காவல்படையினர் டி.எஸ்.பி. தலைமையிலான 3 இன்ஸ்பெக்டர்கள், 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 108 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முக்கிய இடங்களில் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. கண்காணிப்பு காமிரா மூலமும் கண்காணித்தனர்.மேட்டுப்பாளையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவையில் போடப்பட்டுள்ள பாதுகாப்புகளை கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி பார்வையிட்டார்.

திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தவ்ஹீத் ஜமாத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் இன்று காங்கயம் சாலையில் சி.டி.சி.கார்னர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இன்று மாலை மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும் அங்கிருந்து பேரணியாக சென்று யுனிவர் செல் தியேட்டர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த போவதாக ஜமாத் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் அறிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மற்றும் யுனிவர் செல் தியேட்டர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.