கவுண்டம்பாளையம்:
கோவை அருகே உள்ள பன்னிமடை ஊராட்சி ரோஸ் கார்டன், தென்றல் நகர், முல்லை நகர், தர்மராஜா நகர், கடை வீதி, கணேஷ் நகர், ஆண்டாள் அவென்யூ, சூர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சியில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை வடகோவை மற்றும் தடாகம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். மறியல் காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டனர்.
மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதிஷ், ஊராட்சி செயலாளர் ஈஸ்வரி மற்றும் தடாகம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.