கோவை:
விருதுநகர் மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி காணாமல் போனது குறித்து அவரது தந்தை திருமயம் போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவகாசியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 25) என்பவர் சிறுமியை கடத்தி கோவைக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து திருமயம் போலீசார் கேட்டு கொண்டதின் பேரில் கோவை பீளமேடு போலீசார் விளாங்குறிச்சி குமரன் நகரில் ரஞ்சித்குமார் தங்கியிருந்த வீட்டிற்கு அவரை பிடிக்க சென்றனர். ஆனால் அவர் இல்லை. வீடு பூட்டியிருந்ததால் சந்தேகத்தின் பேரில் வீட்டு உரிமையாளரிடம் சாவி வாங்கி போலீசார் திறந்து பார்த்தனர். இதில் அந்த வீட்டில் ரூ.7 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள கள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததும், அவை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. வீட்டில் இருந்த ரஞ்சித்குமார் சிறுமியுடன் தப்பிச்சென்றுவிட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் ரஞ்சித்குமார் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் நடராஜன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அவற்றின் விவரம் வருமாறு:-
கோவை விளாங்குறிச்சி குமரன் நகரில் கடந்த ஜூன் மாதம் முதல் நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் தீப்சிங் (24) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த வெல்டிங் வேலை செய்யும் ராகவேந்திரன் (21) ஆகியோர் வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இவர்களின் நண்பர் ரஞ்சித்குமார் தொடர்பு கொண்டு தான் ஒரு பெண்ணை கடத்தி வந்து விட்டதாகவும், தங்குவதற்கு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே தீப் சிங்கும், ராகவேந்திரனும் கோவை வந்து தங்களுடன் தங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமார் சிறுமியுடன் கோவை வந்து நண்பர்களுடன் தங்கியுள்ளார். ஆனால் ரஞ்சித்குமார் கோவை வந்து தங்கியிருப்பது திருமயம் போலீசாருக்கு தெரியவந்ததும், அவர்கள் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தீப்சிங் மற்றும் அவர்கள் நண்பர்களுக்கு தெரியவந்ததும் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார்கள்.
பீளமேடு போலீசார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டியிருப்பதை பார்த்து சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். இதில் வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த வீட்டிலிருந்து ஒரு ஸ்கேனர், ஒரு பிரிண்டர், ரூபாய் நோட்டுகளை வெட்ட உதவும் கட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வீட்டு உரிமையாளர் மூலம் தீப் சிங் மற்றும் ராகவேந்திரன் ஆகியோரின் செல்போன் எண்களை பெற்று செல்போன் டிராக்கிங் மூலம் 2 பேரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தீப் சிங் மற்றும் ராகவேந்திரன் ஆகியோர் வேலைக்கு சென்ற நேரம் போக மற்ற நேரங்களில் அசல் 2 ஆயிரம் ரூபாயை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தனர். அதை அவர்கள் புழக்கத்தில் விட்டார்களா? என்று தெரியவில்லை. இதற்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ள ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த விவரம் சிறுமியை கடத்தி வந்த ரஞ்சித்குமாருக்கு தெரியுமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கோவையிலிருந்து தப்பிய ரஞ்சித்குமார் சிறுமியுடன் சேலம் அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். ரஞ்சித் குமார் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரஞ்சித்குமார் சிறுமியுடன் கோவை வந்து தங்கியதால் தான் இந்த கள்ளநோட்டு கும்பல் பற்றி போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இல்லையென்றால் அவர்கள் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டிருப்பார்கள். ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்த 2 பேரும் முதன்முதலாக இப்போது இந்த தொழிலில் இறங்கியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து வேறு யாரிடமாவது கொடுத்தார்களா? அல்லது அவர்களே புழக்கத்தில் விட்டார்களா? அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.