செய்திகள்

கடனை திருப்பி செலுத்த முடியாததால் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

கோவையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

கோவை:

கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது தொழிலுக்கு பலரிடம் கடன் வாங்கினார்.

இவரிடம் இருந்த நிலத்தை விற்றும் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். கடன் பிரச்சனையில் இருந்த வெற்றிவேல் பெரிய தடாகம் சாலையில் உள்ள வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெற்றி வேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை காசிகவுண்டன் புதூரை சேர்ந்த முருகன் மகன் விஜய குமார் (25). இவரது நண்பர் தினேஷ் குமார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசாமல் இருந்து வந்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த விஜயகுமார் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் வீட்டில் இருந்த விஜய குமார் வி‌ஷம் குடித்து விட்டார்.

அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.