செய்திகள்

கோவையில் தலையில் கல்லைப் போட்டு கஞ்சா வியாபாரி படுகொலை

கோவையில் இன்று காலை தலையில் கல்லைப்போட்டு கஞ்சா வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விஜயன் என்ற விஜய்குமார் (வயது 45).

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு பிளக்ஸ் பேனர் கட்டும் வேலை பார்த்து வந்தார். வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள சி.எம்.சி. காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தங்கினார்.

இவர் மீது கோவையின் பல்வேறு போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு அதே பகுதியில் படுத்தார். இன்று காலை அந்த வழியே சென்ற சிலர் பார்த்தபோது அங்கு விஜயன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அந்த பகுதிமக்கள் இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது விஜயன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.