செய்திகள்

கோவை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி மயங்கி விழுந்து மரணம்

கோவை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கோவை:

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் என்ற அந்தோணி ஆனந்த்(வயது 43).

கடந்த 2009-ம் ஆண்டு சூலூரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நேற்று மாலை 3.45 மணி அளவில் ஜெயிலில் நடந்து சென்ற ஆனந்த் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த சக கைதிகள் ஜெயில் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள் ஆனந்த்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மாரடைப்பு காரணமாக ஆனந்த் இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.