திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 3 மணியளவில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.
அதனை தொடர்ந்து சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் தரைப்பாலம், ஊத்துக்குளி ரோடு ஒத்தக்கண் பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தபடி சென்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் மாநகர் பகுதிகளான அனுப்பர்பாளையம், அங்கேரி பாளையம், குமரன் நகர் உள்பட பல இடங்களில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழைக்கு வீரபாண்டியில் உள்ள 10-க்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
அவினாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 11 மணியளவில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு அவினாசி கால்நடை ஆஸ்பத்திரி எதிரே சேவூர் செல்லும் ரோட்டை இணைக்கும் பகுதியில் இருந்த பழமை வாய்ந்த ஆலமரம் வேருடன் சாய்ந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதே போல் பல இடங்களில் சிறிய மரங்கள் முறிந்தன. மேலும் அவினாசி பகுதியில் காமராஜ் வீதி, வி.எஸ்.வி காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி இருளில் மூழ்கியது.
உடுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு 1,026 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து 50 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 87.34 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பல்லடம் பகுதியில் பெய்த மழைக்கு அண்ணாநகர் பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது.இதனால் அங்கிருந்த மக்கள் இரவு முழுவதும் மழைநீரை வெளியேற்றியபடி இருந்தனர். பல்லடம் மங்கலம் சாலை அரசு பெண்கள் பள்ளி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.
கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ராமநாதபுரம், பாப்பநாயக்கன் பாளையம், பெரியகடை வீதி, ரெயில்நிலையம் உள்பட அனைத்து பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் அவினாசி சாலை, காந்திபுரம் சாலை, திருச்சி சாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வடகோவை மேம்பாலம், அவினாசி மேம்பாலங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. தோலம்பாளையம் அடுத்த தோகமலையில் பெய்த மழையால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால் அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதேபோல் அங்குள்ள பெட்ரோல் பங்க்கை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் பெட்ரோல் போட வாகனங்களால் வர முடியவில்லை. இதேபோல் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, ஆலாந்துறை உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- திருப்பூர் வடக்கு-20, அவினாசி-28, காங்கயம்-14, மூலனூர்-17, திருப்பூர் கலெக்டர் அலுவலகம்-27, திருப்பூர் தெற்கு-60.