ஜப்பான் செல்லும் மாணவி சபிதா - ஆசிரியை மகேஸ்வரி 
செய்திகள்

கல்வி முறைகள் பற்றி அறிந்து கொள்ள ஜப்பான் செல்லும் கோவை அரசு பள்ளி மாணவி

ஜப்பானின் கல்விமுறைகள் குறித்து அறிந்துகொள்ள கோவை மாவட்டம் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவி சபிதா, இயற்பியல் ஆசிரியை மகேஸ்வரி ஜப்பான் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

காரமடை:

அரசுப்பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் படித்து கலை, பண்பாடு, அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகள் ஜப்பான் நாட்டிற்கு சென்று அங்குள்ள கல்விமுறைகள் குறித்து அறியும் வகையில் புதிய பாடத்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகள் ஆங்கிலத்திறன் பெற்றவர்களாகவும், திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இத்திட்டத்தில் ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவி சபிதா, இதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வரும் மகேஸ்வரி ஆகியோர் ஜப்பான் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வருகிற 10-ந்தேதி ரெயில் மூலம் சென்னை சென்று அங்கிருந்து பிற மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் 11-ந்தேதி டெல்லி செல்கிறார்கள். 12-ந்தேதி விமானம் மூலம் ஜப்பான் செல்கிறார்கள். பின்னர் அங்குள்ள கல்வி முறைகள், அறிவியல் அருங்காட்சியகம் போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டு 22-ந்தேதி சென்னை திரும்புகிறார்கள்.

இதுகுறித்து மாணவி சபிதா கூறியதாவது, ஏழ்மையானது எனது குடும்பம். அப்பா முருகேசன் கூலி வேலைக்கு செல்கிறார். எனது தாயார் ஆடுகள் மேய்த்து வருகிறார். ஒரு அக்கா பட்டப்படிப்பு படித்துள்ளார். தம்பி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலைக்கு என்னை ஆளாக்கிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஆசிரியை மகேஸ்வரி மற்றும் மாணவி சபிதா ஆகியோர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பெள்ளி, ஆசிரியர் அருள்சிவா, மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.