கோயம்பத்தூர் மாவட்டம் 
செய்திகள்

ஆரஞ்சில் இருந்து பச்சை மண்டலமாக மாறும் கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கோவை விரைவில் பச்சை மண்டலமாக மாற உள்ளது.

மாலை மலர்

கோவை:

கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த 146 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 114 பேர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 14 பேர் என மொத்தம் 274 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 114 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையை சேர்ந்த 4 பேர், நீலகிரியை சேர்ந்த 3 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 8 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த 4 பேரில் வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கரும்புக்கடையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்தநிலையில் அந்த பெண்ணும் முழுமையாக குணமடைந்து தனது குழந்தையுடன் நேற்று வீட்டிற்கு திரும்பினார்.

இதன் காரணமாக கோவை தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. கடந்த 10 நாட்களாக கோவை மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கோவை விரைவில் பச்சை மண்டலமாக மாற உள்ளது.

இதே போல திருப்பூர் மாவட்டத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட 114 பேரும் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினர். கடந்த 11 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 11 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த 2 லாரி டிரைவர், ஒரு லாரி டிரைவரின் தங்கை ஆகியோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதில் 2 லாரி டிரைவர்கள் குணமடைந்ததால் அவர்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது லாரி டிரைவரின் தங்கை மட்டும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.