செய்திகள்

கோவை மத்திய ஜெயிலில் 58 கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்

கோவை மத்திய ஜெயிலில் 51 கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதேபோல சேலம் மத்திய ஜெயில் கைதிகள் 7 பேரும் கோவை மத்திய ஜெயிலுக்கு வந்து தேர்வு எழுதினார்கள்.

மாலை மலர்

கோவை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.

கோவை கல்வி மாவட்டத்தில் 108 மையங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் 33,850 பேர், தனித்தேர்வர்கள் 1637 பேர் எழுதினர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் 7385 பேர், தனித்தேர்வர்கள் 387 பேர் எழுதினர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 147 தேர்வு மையங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் 41,235 பேர், தனித்தேர்வர்கள் 2024 பேர் என 43,259 பேர் எழுதினர்.

தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் 13 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் இருந்து இன்றுகாலை போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்வு பணியில் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், அறைக் கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் என சுமார் 3400 பேர் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் உள்ள பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களுக்கு மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பறக்கும் படை அதிகாரிகளும் தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மத்திய ஜெயிலில் 51 கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதேபோல சேலம் மத்திய ஜெயில் கைதிகள் 7 பேரும் கோவை மத்திய ஜெயிலுக்கு வந்து தேர்வு எழுதினார்கள். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர். #Tamilnews