கோவை:
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனங்களில் நடந்த விதிமீறல் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2016-ம் ஆண்டு மட்டும் 76 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 1462 பேர் விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் லட்சக்கணக்கான பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே துணைவேந்தர் கணபதி பணிஆணை வழங்கினார் என்று நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களின் குற்றச்சாட்டு ஆகும்.
இதுதொடர்பாக புகார் தெரிவித்திருந்தவர்களை நேரில் வரவழைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் அருள்மீனா என்ற உதவி பேராசிரியை ஒருவராவர். இவர் நேர்முகத்தேர்வில் பங்கேற்ற பேராசிரியர்கள் யார்- யார்? என்னென்ன கேள்வி கேட்டார்கள்? என்ற விவரங்களை போலீசாரிடம் கூறி உள்ளார்.
உயிர்-தகவலியல்(பயோ- இன்பர்மேடிக்ஸ்) பிரிவில் உதவி பேராசிரியை பணியிடத்துக்கு இவர் விண்ணப்பித்திருந்தார். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த பிரிவில் நேர்முகத்தேர்வில் பங்கேற்ற ஒரே பெண் இவர் மட்டும் தான். எனவே தனக்கு நிச்சயம் பணி ஒதுக்கப்படும் என காத்திருந்த அருள்மீனாவுக்கு ஏமாற்றமே மிசியது. அதுவும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த பணியிடத்தில் சம்பந்தமே இல்லாமல் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதன்பின்னணி குறித்து அருள் மீனா விசாரித்த போது பல தகவல்களும், ஆதாரங்களும் கிடைத்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அவற்றை சமர்ப்பித்துள்ளார்.
இதேபோல வடவள்ளியை சேர்ந்த லட்சுமி பிரபா என்பவரும் பேராசிரியர் பணியிட விதிமீறல் தொடர்பாக துணைவேந்தர் கணபதி மீது புகார் கூறியிருந்தார். உயிர் தொழில்நுட்பம்(பயோ-டெக்னாலஜி) பிரிவில் நேர்முகத் தேர்வில் பங்கேற்ற இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கேட்ட போது, துணைவேந்தர் தன்னை சாதியை சொல்லி திட்டியதாக லட்சுமி பிரபா போலீசில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் கணபதி மீது வடவள்ளி போலீசார் வன்கொடுமை வழக்குபதிவு செய்திருந்தனர்.
தற்போது தனது பிரிவில் நடந்த விதிமீறல்கள் குறித்த ஆதாரங்களை லட்சுமிபிரபா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார். இதே போல ராம்குமார் (தொழில் துறை உயிர்தொழில் நுட்பம்), தாயுமானவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), நிலவழகன் (உயிர்- தகவலியல்) ஆகியோரும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி தங்களது புகாருக்கான ஆதாரங்களை கொடுத்தனர்.
துணைவேந்தர் மீதான புகாருக்கு ஆதாரங்கள் குவிந்து வரும் நிலையில் அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பேராசிரியர்கள் குறித்து மாணவர்கள் ஏராளமான தகவல்களை கூறினர். அதன்பேரில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் மீது புகார் தெரிவித்தவர்களிடம் நடந்து வரும் விசாரணை இன்னும் சில நாட்களில் முடிவடையும். அதன்பிறகு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். #tamilnews