செய்திகள்

அ.தி.மு.க. இளைஞர் பாசறை நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை

கோவை குனியமுத்தூரில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபரை செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

கோவை குனியமுத்தூர் ரங்கசாமி நகரை சேர்ந்தவர் விஷ்ணு பிரபு (வயது 35). இவர் அ.தி.மு.க. மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளராக உள்ளார்.

சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அழைப்பு வந்தது. இதில் பேசிய நபர் தன்னை தங்க வியாபாரி என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் உங்களிடம் நிறைய பணம் உள்ளதாக கேள்விப்பட்டேன். எனவே என்னிடம் உள்ள தங்கத்தை வாங்குமாறு கூறி உள்ளார். ஆனால் விஷ்ணு பிரபு வாங்க மறுத்து செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் தங்கத்தை வாங்கவில்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதில் அதிர்ச்சியடைந்த விஷ்ணு பிரபு இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபரை செல்போன் எண்ணை வைத்து தேடி வருகிறார்கள். #TamilNews