செய்திகள்

ஜிண்டால் மீதான நிலக்கரி ஊழல் வழக்கு: 5 பேரின் இடைக்கால ஜாமீன் மே 25-ம் தேதி வரை நீட்டிப்பு

நவீன் ஜிண்டால் மீதான நிலக்கரி ஊழல் வழக்கில் புதிதாக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 5 பேரின் இடைக்கால ஜாமீன் மே 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர்கோண்டா முர்கதங்கல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால், உட்பட பலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. ஏற்கெனவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில், கடந்த மார்ச் மாதம் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் ஆலோசகர் ஆனந்த் கோயல், குர்கானைச் சேர்ந்த கிரீன் இன்ப்ரா நிறுவனத்தின் துணைத் தலைவர் சித்தார்த் மத்ரா, மும்பையைச் சேர்ந்த கே.இ.இன்டர்நேஷனல் நிறுவன தலைமை நிதி அதிகாரி ராஜீவ் அகர்வால், நிஹார் ஸ்டாக்ஸ் லிமிடெட் இயக்குநர் பி.எஸ்.என்.சூர்யநாராயணன், மும்பை எஸ்ஸார் பவர் லிமிடெட் நிர்வாக துணைத் தலைவர் சுஷில் குமார் மரூ ஆகிய 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜரான அவர்கள் 5 பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த ஜாமீன் காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்யாததால், 5 பேரின் இடைக்கால ஜாமீனை மே 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி பாரத் பராஷர் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்குவதில் சி.பி.ஐ. காலதாமதம் செய்வதை கடுமையாக ஆட்சேபித்த நீதிபதி, இந்த விஷயத்தை எஸ்.பி. அந்தஸ்துள்ள சி.பி.ஐ. அதிகாரி தனிப்பட்ட முறையில் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார்.