தமிழகம் முழுவதும் வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். கடனை அரசு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வங்கிகள் கடனை வசூலிக்க ஜப்தி நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் உடமைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டுறவு சங்க பதிவாளர் ஞானசேகரன் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகளின் உடைமைகளை ஜப்தி செய்யக் கூடாது. கடன் வசூல் தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை, நோட்டீஸ் அனுப்புதல் போன்ற எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால கடன்கள், மத்திய கால கடன்களாக மாற்றப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற தகுதியுள்ள விவசாயிகளுக்கு அதிக அளவில் விவசாய கடன் வழங்க வேண்டும்.