செய்திகள்

உத்தரபிரதேசத்தில் இலவச உணவகம்: 9-ந்தேதி முதல்வர் தொடங்கிவைக்கிறார்

அம்மா உணவகத்தை மிஞ்சும் வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூரில் இலவச உணவகம் தொடங்கப்படுகிறது. வருகிற 9-ந்தேதி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இதை தொடங்கி வைக்கிறார்.

மாலை மலர்

தமிழ்நாட்டில் ‘அம்மா உணவகம்‘ செயல்பட்டு வருகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று மற்ற மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் அம்மா உணவகத்தை மிஞ்சும் வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இலவச உணவகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் அங்குள்ள சஹாரன்பூரில் இலவச உணவகம் தொடங்கப்படுகிறது. வருகிற 9-ந்தேதி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இதை தொடங்கி வைக்கிறார்.

இந்த உணவகத்துக்கு பிரபு கீ ரசோய் (கடவுளின் சமையலறை) என பெயரிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் அளிக்கும் நன்கொடை உதவியால் தினசரி 300 பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட இருக்கிறது.


இந்த உணவகத்தை நிர்வகிப்பதற்காக அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கொண்ட 300 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.