செய்திகள்

சென்னையில் நகராட்சி, குடிநீர் திட்டப்பணிகள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னையில் ரூ.57 கோடியில் நிறைவேற்றப்பட்ட நகராட்சி, குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 17 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியுடன் கூடிய குடிநீர் பகிர்மான குழாய்கள் அபிவிருத்தி பணிகள், 15 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியுடன் கூடிய குடிநீர் பிரதான குழாய்கள் அபிவிருத்தி பணிகள் மற்றும் 3 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் நகராட்சி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

மேலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்; வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை நகராட்சியில் 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு கட்டடம்; தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்டேட் பாங்க் காலனியில் 1 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பூங்கா மற்றும் போல்டன்புரம் கக்கன் காலனியில் 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பூங்கா;

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும், புதிய வண்ணாரப் பேட்டை-பட்டேல் நகர் மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கொருக்குப் பேட்டை-புத்தா தெரு, வியாசர்பாடி- கல்யாண புரம், சூளை-ராட்லர் தெரு, புரசைவாக்கம்-கங்காதீஸ்வரர் கோவில் தெரு, செனாய் நகர்-சுப்புராயன் தெரு மற்றும் புல்லா அவென்யூ, கொளத்தூர்- பாடசாலை தெரு, பெரம்பூர்- மார்க்கெட் தெரு மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை, அயனாவரம்-பாலவாயல் தெரு, நுங்கம்பாக்கம்- ராஜாஜி சாலை, ஆழ்வார் பேட்டை-பீமன்னா தோட்டம் சாலை, மேற்கு மாம்பலம்-கோதண்டராமர் கோவில் தெரு, மேற்கு சைதாப்பேட்டை-மேற்கு ஜோன்ஸ் சாலை, கிண்டி- மடுவின்கரை, கோடம்பாக்கம்-என்.எஸ்.கே. சாலை, எம்.ஜி.ஆர். நகர்- கோவிந்தசாமி தெரு, திருவான்மியூர்-பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள 20 சென்னை மாநகராட்சி மேல் நிலைப் பள்ளிகள்;

இராயபுரம்- புதுமனை குப்பம், கொடுங்கையூர்- திருவொற்றியூர் நெடுஞ்சாலை சின்னான்டிமடம், அகரம்-எஸ்.ஆர்.பி. கோவில் தெரு (வடக்கு), பழைய வண்ணாரப்பேட்டை- ஜெயராமன் தெரு, மண்ணடி- அங்கப்பன் தெரு, அமைந்தகரை-பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி- திருவல்லிக் கேணி நெடுஞ்சாலை, வடபழனி-அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள 8 சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள், என மொத்தம் 28 சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சீர்மிகு மின்னனு வகுப்பறைகள்;

மண்ணடி, ஆதம் தெருவில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம்; மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிக்கூட சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் தெலுங்கு தொடக்கப் பள்ளிகளில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப் பீட்டிலான வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கலை யரங்கம்;

எண்ணூர்- தாழாங்குப்பம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்பு; கத்திவாக்கம் நெடுஞ்சாலை-எண்ணூர், சுனாமி குடியிருப்பு; தண்டையார்பேட்டை- சுனாமி குடியிருப்பு, ஏ.ஏ. திட்ட சாலையில் ‘பி’ மற்றும் ‘எம்’ பிளாக்குகள்; நெற்குன்றம்- மேற்கு நடேசன் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு; கொடுங்கையூர்- யூனியன் கார்பைடு காலனி 9 வது சாலை ஆகிய இடங்களில் 4 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 6 பூங்காக்கள்;

பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக 7 வருட பராமரிப்புடன் 5 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 4 இயந்திரப் பெருக்கி வாகனங்கள்;

என மொத்தம் 57 கோடியே 79 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தொழில் வணிக துறையின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஒண்டிபுதூரில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தாய்கோ வங்கியின் 46-வது கிளையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச் சாளரதகவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து, கூடுதலாக சுகாதாரத் துறையிடமிருந்து பெற வேண்டிய தடையில்லாச் சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய உரிமம் மற்றும் மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்த மின் இணைப்பு ஆகியவற்றிற்கான சேவைகளை உள்ளடக்கி 9 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர தகவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதன் மூலம், தொழில் முனைவோர்கள் பல்வேறு துறைகளிடமிருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லாச் சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

தமிழ்நாடு அரசு, படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி பெற்றிட ஏதுவாக இணைய தளம் மூலமாக விண்ணப்பித்திட மேம்படுத்தப்பட்ட தகவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு உதவி செய்யும் திட்டத்தின் மூலம், தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை தொழில்களை தொடங்கிட, திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் (அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய்) வழங்குவதுடன், வங்கிக் கடனுக்கான வட்டியில் 3 விழுக்காடு பின் முனைமானியமும் அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், படித்த முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி பெற்றிட ஏதுவாக இணைய தளம் மூலமாக விண்ணப்பித்திட மேம்படுத்தப்பட்ட தகவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதன் மூலம், பயனாளிகள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணைய தளத்தின் வாயிலாக, பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

தொழில் வணிகத் துறையின் திட்டங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, சமூக ஊடக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றின் சேவைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.