போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, அமைதி நிலவ முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் கடந்த 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.
நான்கு தினங்களுக்கு முன் மந்த்சார் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மந்த்சார் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை கைவிடக்கோரியும், மாநிலம் முழுவதும் அமைதி நிலவ வேண்டியும் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.
இதற்காக, போபால் நகரில் உள்ள தசரா மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து மற்ற மந்திரிகள் மற்றும் கட்சித்தொண்டர்களும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என தெரிகிறது.