மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள் மறையும் போது அந்த கட்சியை அடுத்து வழிநடத்தப் போவது யார்? என்ற பெரிய கேள்வி எழத்தான் செய்யும்.
பொறுப்புக்கு வருகிற தலைவர்களின் செயல்பாட்டை பொறுத்துத்தான் அந்த கட்சியின் எதிர்காலம் அமையும்.
நேருவிற்கு பிறகு காங்கிரசை கட்டிக்காக்கப் போவது யார்? என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்த போது காமராஜர் பொறுப்பேற்று லால்பகதூர் சாஸ்திரியையும் அவருக்கு பிறகு இந்திராவையும் பிரதமராக்கி கட்சியை வழிநடத்தினார்.
தமிழகத்தில் அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி தலைமை பொறுப்பேற்று தி.மு.க.வை இன்று வரை வழி நடத்துகிறார்.
எம்.ஜி.ஆருக்குப்பிறகு ஜெயலலிதா தனது ஆளுமை திறமையால் அ.தி.மு.க.வை வழிநடத்தினார். இப்போது அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
கட்சி பொறுப்பை ஏற்ற சசிகலாவும் ஜெயிலுக்கு சென்றுவிட்டார். அடுத்து பொறுப்புக்கு வந்த டி.டி.வி. தினகரனும் ஜெயிலுக்கு சென்று விட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி அணியா? ஓ. பன்னீர்செல்வம் அணியா? என்ற கோஷ்டி குழப்பம் தீர்ந்த பாடில்லை. இரு அணிகளின் இணைப்புக்கான முயற்சிகள் தோற்றுப்போனதால் அவரவர் பாதையில் பயணத்தை தொடங்கிவிட்டார்கள். இருவருமே ஜெயலலிதா படத்தை போட்டே கட்சியை கொண்டு செல்கிறார்கள்.
123 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் கட்சியையும், ஆட்சியையும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் எடப்பாடி தாக்குப்பிடிப்பாரா? கட்சியை தாங்கிப் பிடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் முதல்-அமைச்சர் பதவியையும், கட்சி பணியையும் சேர்ந்தே ஜெயலலிதா பாணியில் கொண்டு செல்கிறார்.
ஜெயலலிதா தலைமையின் மீது கட்சியினர் முழு நம்பிக்கை வைத்திருந்தனர். அதே போல் தொண்டர்கள் நம்பிக்கையையும், அமைச்சர்கள், அதிகாரிகள் நம்பிக்கையையும் பெறும் வகையில் தனது பணி திட்டங்களை வகுத்துக்கொள்கிறார். இது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, நேரடியாக அணுக முடிகிறது. எளிமையாக எல்லோரிடமும் பழகுகிறார். தினமும் பொதுமக்களை சந்திப்பது, கோட்டையில் பணிகளை கவனிப்பது என்று தொடரும் பணிகளால் அவர் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி வருகிறார் என்றார்.
ஜெயலலிதா இல்லாத நிலையில் இனி எடப்பாடியால் கட்சியை வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை கட்சியினரிடமும் துளிர் விட்டுள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கட்சியினர் அவருக்குத்தான் பிரமாண்டமான கட்-அவுட், பேனர்களை வைத்து வரவேற்பு கொடுப்பார்கள்.
அதே பாணியில் இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் பேனர்கள் வைக்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற அரசு விழாவுக்கு ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
ஜெயலலிதா பேனர்களில் அதை வைப்பவரது படம் போடக்கூடாது. பெயர் மட்டும் தான் இடம் பெற்று இருக்கும். இப்போதும் அதே பாணியில்தான் விளம்பர பேனர்களை வைத்து இருந்தார்கள்.
கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கெடுக்கிறார். இன்றும் மதுரையில் அரசு விழாவுக்கு செல்லும் எடப்பாடி பழனிச்சாமி இளைஞர்கள் பெருவிழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மாவட்டந்தோறும் அரசு விழாக்கள், நலத்திட்ட உதவிகளை வழங்குதல், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் மாவட்டந்தோறும் கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.