கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
அய்யப்பனுக்கு நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
இவர்களுக்கு வசதியாக சபரிமலை பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் விமான நிலையம் அமைக்க ஏதுவான இடங்களை தேர்வு செய்து தரும்படி மாநில அரசிடம் கூறி இருந்தது.
அதன்படி விமான நிலையம் அமைக்க உகந்த இடங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அதன்படி சபரிமலையை அடுத்துள்ள எருமேலி, வெள்ளறாடி, செறுவள்ளி, கோட்டயம், கல்லேலி, கும்பளா ஆகிய 6 இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.