மாணவர் விடுதி மற்றும் கூடுதல் பள்ளி கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் 
செய்திகள்

திருவள்ளூர், கடலூரில் கூடுதல் பள்ளி கட்டிடம்- மாணவர் விடுதி: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கூடுதலாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், மாணவர் விடுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், கோலப்பன்சேரியில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம்;

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ம.புடையூரில் இயங்கி வரும் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 270 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடம்;

மொத்தம் 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடம் மற்றும் கூடுதல் பள்ளிக் கட்டடத்தை முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜலெட்சுமி, பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் வாசீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 2442 சதுர அடி கட்டிட பரப்பளவில், 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 108 பக்தர்கள் உணவருந்தும் வகையில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்,

மதுரை, ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3669 சதுர அடி கட்டிட பரப்பளவில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேதியியல் ஆய்வுக்கூடம், என மொத்தம் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.