சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாது:-
ஜெயலலிதா கடந்த 10.5.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவிதி எண் 110-ன் கீழ் அறிவித்த அறிக்கையில், மாநிலத்திலுள்ள போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகள் சேவை எவ்வித தொய்வும் இன்றி வழங்கிட பணிமனைகள் மிகவும் அவசியம் ஆகும்.
எனவே, பணிமனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் கோட்டம் சூலூரிலும் புதிய பணிமனைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
புரட்சித் தலைவி ஜெயலலிதா அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தினால் 14 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனையுடன் கூடிய பேருந்து முனையம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் 739 கோடி ரூபாய் செலவில் 27,05,160 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் 7 மாணவ- மாணவிகளுக்கு கையடக்க பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.