முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 
செய்திகள்

கொரோனாவுக்கு பத்திரிகையாளர் உயிரிழப்பு - முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன்(43). இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். கொரோனாவுக்கு தமிழகத்தில் முதன் முதலாக பத்திரிகையாளர் ஒருவர் பலியாகி உள்ளார்.

இந்நிலையில்  தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்முருகன் உயிரிழப்பு சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  கொரோனா தொற்றால் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் காலமானார் என்ற செய்தி கேட்டு தான் வேதனை அடைந்துள்ளேன்.   

அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்தக்கொள்கிறேன். உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படும் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க செல்லும்போது கவனமாக இருக்குமாறு ஊடக நண்பர்களுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் மறைவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.