புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவையின் நிதிநிலை குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
புதுவை அரசு 2007-ம் ஆண்டு வாங்கிய கடனுக்கான அசல் தொகையை திருப்பி செலுத்த வேண்டி இருப்பதால் அடுத்த ஆண்டு புதுவை நிதிநிலையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்பது உண்மைதான்.
ஆனாலும், எதிர்க்கட்சிகள் சொல்லும் அளவுக்கு நிதி அவசரநிலை எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிதி பிரச்சினையை அரசு சமாளிக்கும் நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலோ, நடந்து கொண்டு இருக்கும் திட்டங்களை செயல்படுத்துவதிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
புதுவை மாநிலம் மட்டும் நிதி பிரச்சினையில் சிக்கவில்லை. பல மாநிலங்கள் இதே போன்ற நிலையில் உள்ளன. தமிழக அரசுக்கு 2½ கோடி கடன் உள்ளது. உத்தரபிரதேச அரசுக்கு 3½ லட்சம் கோடி கடன் உள்ளது. கர்நாடக அரசுக்கு 1½ லட்சம் கோடி கடன் இருக்கிறது.
பெரும்பாலான மாநிலங்கள் இதே நிலையில்தான் உள்ளன. மத்திய அரசும் நிதி சிக்கலில் இருக்கிறது. புதுவை அரசு பொறுப்புகளை விட கூடுதலாக நிதிகளை பெறுவதற்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கி உள்ளது. இதற்காக நாங்கள் கடன் வாங்குவதை நியாயப்படுத்தவில்லை.
அதே நேரத்தில் மக்கள் பீதி அடையும் அளவுக்கு நிதிநிலைமை மோசமாக இல்லை என்பதை நான் உறுதியாக சொல்லி கொள்கிறேன்.
கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து விதிமுறைகளையும் மீறி நிதிகளை பல்வேறு துறைகளுக்கு மாற்றி உள்ளனர்.
அதே போல் ஏராளமான ஊழியர்களை பொதுப் பணித்துறையிலும், அரசு மருத்துவ கல்லூரியிலும், பல அரசு பொது நிறுவனங்களிலும் நியமித்து இருக்கிறார்கள். அதனால் பல்வேறு நிதி சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், முந்தையை அரசு செய்தவற்றுக்கும் அடுத்து வரும் அரசுதான் பொறுப்பு என்ற மரபு இருப்பதால் அதில் உள்ள சீர்குலைவுகளை சரி செய்வதற்கு எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை பாக்கி தொகை மற்றும் முதியோர் பென்சன் பாக்கி போன்றவற்றுக்கான பணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நமக்கு திட்டமில்லா செலவில் ரூ. 1250 கோடி தர வேண்டி உள்ளது. அதில் ரூ.500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். மேலும் 7-வது சம்பள கமிஷன் ஈட்டு தொகையாக ரூ.550 கோடி தருவதக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
எல்லா விஷயங்களையும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் சொல்லி இருக்கிறோம். அவரும் சாதகமாக இருக்கிறார். மீண்டும் விரைவில் அவரை சந்திக்க இருக்கிறேன்.
புதுவையில உள்ளூரில் கிடைக்கும் வளங்களை வைத்து நிதி ஆதாரங்களை பெருக்க நீண்டகால திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
மேலும் நிதி ஆதாரங்களை திரட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் தலைமை செயலாளர் விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து இருக்கிறோம். அறிக்கை வந்த பிறகு சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இந்த நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி அளவுக்கு அரசு உதவி செய்து வருகிறது.
புதுவையின் நிதி நிலைமையை சீரமைக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டோம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.