தேசிய கொடி ஏற்றிய புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி 
செய்திகள்

புதுவை சுதந்திரதின விழா கொண்டாட்டம்- நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

புதுவையின் விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.

மாலை மலர்

இந்தியாவின் மற்ற பகுதிகள் இங்கிலாந்துக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் புதுவை பகுதி பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.

இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், புதுவைக்கு 1954-ம் ஆண்டுதான் பிரெஞ்சுக்காரர்கள் சுதந்திரம் அளித்தார்கள்.

1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி புதுவை சுதந்திரம் பெற்றது. அந்த நாளை புதுவை விடுதலை நாளாக கொண்டாடி வருகிறார்கள்.

இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) புதுவையின் விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடந்தது. காலை 8.55 மணிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி காந்தி திடலுக்கு வந்தார். அவரை அரசு செயலாளர் ஆலிஸ்வாஸ் வரவேற்று அழைத்து சென்றார்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கொடிக்கம்பத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை முதல்-அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டார்.

தொடர்ந்து காவல் துறை, என்.சி.சி., பள்ளி மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி மேடையில் இருந்தபடி ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பரதநாட்டியம், காளியாட்டம், நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், வீரவிளையாட்டுகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது