செய்திகள்

ஒக்கி புயல் பாதிப்பின்போது எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கம்

ஒக்கி புயல் பாதிப்பின்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.

மாலை மலர்

சென்னை:

ஒக்கி புயல் பாதிப்பின்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் “ஒக்கி” புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 29.11.2017 அன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கைக்கு தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பான அறிவிப்பு மாநில நிவாரண ஆணையர், முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு சென்னை மண்டல இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநரால் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் அடிப்படையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 29.11.2017 அன்று12.15 மணிக்கு முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரால் அறிவுறுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து உயர் அலைவரிசை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம், ஆழ்கடலில் 40 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு 29.11.2017 அன்று பிற்பகல் 2.15 மணிக்கு எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டு, 100 படகுகளில் தங்களது சொந்த ஊர்களுக்கும் சிலர் அருகாமையில் உள்ள ஊர்களுக்கும் கரை திரும்பினர்.100 கடல் மைல்களுக்கு மேல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த, புயல் சின்னம் உருவாவதற்கு முன்னரே ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு மேற்படி எச்சரிக்கை தகவல்கள், உரிய தொழில் நுட்ப கருவிகள் இன்மையால் சென்றடையவில்லை.

இந்நிலையில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. பின்னர், எனது உத்தரவின்படி, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர்.

இப்பணிகளை மேலும் துரிதப்படுத்த 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும், 7 மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டன. இது தவிர, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை தேடி மீட்டெடுக்க, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய விமானப் படை ஆகியவற்றை அனுப்புமாறு பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

மேலும், 11 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆகியோர் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நான் உடனடியாக அனுப்பி வைத்தேன். பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களை அவரவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வரும் பணியினை ஒருங்கிணைக்க 5 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் நான் அனுப்பி வைத்தேன்.

பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் தங்களது சொந்த ஊர் நலமாக திரும்புவதற்காக ஒவ்வொருவருக்கும் உணவுப் படியாக தலா ரூபாய் இரண்டாயிரமும், அதிகபட்சமாக மீன்பிடி விசைப்படகிற்கு ஆயிரம் லிட்டர் எரி எண்ணெய் வழங்கப்பட்டது.

அரசால் அனுப்பி வைக்கப்பட்ட 5 மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநி லங்களுக்கு சென்றடைந்து, எடுத்த நடவடிக்கைகளால் அங்கு தஞ்சமடைந்திருந்த 217 மீன்படி படகுகள் மற்றும், 1,724 தமிழ்நாடு மீனவர்கள் பத்திரமாக சொந்த ஊர்களுக்கு படகுகளுடன் அழைத்து வரப்பட்டனர்.

12.12.2017 அன்று நான் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற் கொண்டேன். அப்போது, உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் இருபது லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கவும், ஊனமடைந்த மீனவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூபாய் ஐந்து லட்சம் வழங்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டேன்.

மேலும், மீனவர் குடும்பங்களுக்கு, வாழ்வாதார உதவியாக ஐந்தாயிரம் ரூபாயும், காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு சிறப்பு வாழ்வாதார உதவியாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டேன்.

மேலும், இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்டேன்.

19.12.2017 அன்று கன்னியாகுமரி வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ‘ஒக்கி’ புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் வடகிழக்குப் பருவத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிய விரிவான அறிக்கையையும், சேதாரங்களின் மதிப்பீடுகளையும் தெரிவித்து, அவற்றை நிரந்தரமாக புனரமைக்க மத்திய அரசிடம் நிவாரணம் கோரி விரிவான மனு ஒன்றையும் அளித்தேன்.

பிரதமரை சந்தித்த போது, ‘ஒக்கி’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால், அதனையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹெலிகாப்டர்கள், இறங்கு தள வசதி மற்றும் தொலைதூர தொடர்பு வசதி ஆகியவற்றுடன் பிரத்யேக கடற்படை நிலையம் ஒன்றினை விரைவில் நிறுவிட பிரதமரை கேட்டுக் கொண்டேன்.

மீன் பிடிக்க சென்று நாளது தேதி வரை கரை திரும்பாத தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் தேடி கண்டுபிடித்திட மத்திய பாதுகாப்புத் துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். குறிப்பாக, ஆழ்கடலுக்கு சென்றுள்ள கடைசி மீனவர் கிடைக்கின்ற வரையில் தேடுதல் பணி தொடர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஒக்கி புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

நான் அளித்த கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட பிரதமர், அவற்றை கவனமுடன் பரிசீலித்து ஆவன செய்வதாக கூறினார்கள். அதனைத் தொடர்ந்து “ஒக்கி”புயலின் பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முதற்கட்ட நிவாரணமாக 133 கோடி ரூபாய் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

“ஒக்கி” புயல் சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை விரைவாக திரும்ப அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதன் விளைவாக, அம்மாவட்டம் குறுகிய காலத்தில் இயல்பு நிலைமைக்கு திரும்பியது மட்டுமல்லாமல், 3522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.

ஒக்கி புயலினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வாழை, ரப்பர் மரங்கள் மற்றும் கிராம்பு ஆகிய தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு முதற்கட்ட கணக்கெடுப்புப் பணி முடிவுற்றதும், வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தேன்.

அதன்படி, வாழை மரங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், எக்டருக்கு 13,500 ரூபாயும், சாதாரண முறை சாகுபடிக்கு எக்டருக்கு 35,000 ரூபாயும், திசு வளர்ப்பு சாகுபடி முறைக்கு எக்டருக்கு 50,000 ரூபாயும் ஆக மொத்தம் பாதிக்கப்பட்ட வாழைப் பயிருக்கு எக்டருக்கு 48,500 முதல் 63,500 ரூபாய் வழங்கவும்,

ரப்பர் மரப் பயிருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 18,000 ரூபாயும், மறுசாகுபடி செய்யவும், ஊடுபயிராக வாழை அல்லது அன்னாசி சாகுபடி செய்ய எக்டருக்கு 50,000 ரூபாயும், தேனீ வளர்ப்பு முறையினை ஊக்குவிக்க 32,000 ரூபாயும் ஆக மொத்தம் எக்டருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும்,

கிராம்பு பயிரினைப் பொருத்தவரை, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 18,000 ரூபாயும் மாநில நிதியின் கீழ், 10,000 ரூபாயும் ஆக மொத்தம் எக்டருக்கு 28,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டு, முதன் தவணையாக, மாநில நிதியிலிருந்து 3 கோடியே 56 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு 29.12.2017 அன்று ஆணை வழங்கப்பட்டது.

ஆகவே, அம்மாவின் அரசு துரிதமாக, வேகமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #tamilnews