தேனி:
தேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தேனி மாவட்டத்தை பற்றி கூறிய பெருமைகள் மிகவும் பொருத்தமாக தான் உள்ளது. அமைதி நிறைந்த மாவட்டமான தேனிக்கு முக்கூட்டு சாலையில் மக்கள் தேனீக்கள். அதுபோல 4 முதல்-அமைச்சர்களையும், திரைப்படத்துறையில் இளையராஜா, வைரமுத்து, சுருளிராஜன், பாரதிராஜா போன்றவர்களை உருவாக்கி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். இந்த மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில் எந்த வித பிரசாரமும் செய்யாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்து கொண்டே வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார்.
அரசியல் தலைவர் ஆயிரம் பேர் உருவாகலாம். ஆனால் மக்கள் தலைவர் எப்போதாவது தான் உருவாகுவார்கள் அப்படி உருவானவர் தான் எம்.ஜி.ஆர். அவர்கள். அதுபோல தாய் குலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர். தான். அதேபோன்று ஒரு குடும்பத்தின் ஆட்சி, அதிகாரத்தை ஒழித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதான். எத்தனை வேஷங்கள் போட்டாலும் மக்களின் கண்களுக்கு எக்ஸ்ரே போன்று நன்றாக தெரியும். எங்களுக்கு என்றுமே தோல்வி கிடையாது. ஏனென்றால் எங்களை வளர்த்த தலைவர்கள் அப்படி. எங்களின் சொல்வாக்கு சுத்தமாக இருக்கும். அதனால் தான் மக்களிடம் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது.
தமிழகத்தில் வறட்சி வந்தாலும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும், மழை வந்தாலும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் சென்னையின் மேயராகவும், துணை முதல்-அமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த போது சென்னை மாநகரத்தை பற்றி ஏன் சிந்திக்கவில்லை. இப்போது கொளத்தூர் சென்று வருபவர் இதை அப்போதே சென்று சென்னை மாநகர பிரச்சனையை சரிசெய்திருக்கலாமே. இவரை மக்கள் மறந்ததால் தான் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அதேபோன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை தி.மு.க. தான் தடுத்தது.
தற்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து நீதிமன்ற வழக்கில் இருப்பதால் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தான் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்.
அ.தி.மு.க.விற்கு நானும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இருந்து ஆட்சியையும், கட்சியையும் என்றும் கட்டி காப்போம். ஒரு தொண்டன் கூட அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.விற்கோ, மாற்று கட்சிக்கோ செல்லவில்லை. ஏனென்றால் அ.தி.மு.க. தொண்டனின் ரத்தம் சுத்தமாக உள்ளது. தி.மு.க.வின் திட்டம் எல்லாம் எங்கள் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது தான். இதற்காக பல்வேறு வழக்குகள் எங்கள் மீது போடுகின்றனர். எத்தனை வழக்குகள் போட்டாலும் அம்மா ஆன்மா துணையுடன் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.