திருச்சி திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த உஷா என்ற பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பற்றி சட்டசபையில் இன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி, (தி.மு.க.), கே.ஆர். ராமசாமி (காங்கிரஸ்) ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அவர்கள் பேசுகையில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், பொது மக்கள் 23 பேர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகில், 7.3.2018 அன்று இரவு, திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, தஞ்சாவூர் சாலையில் திருச்சி நோக்கி தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்றை ஆய்வாளர் நிறுத்தி, அவ்வாகனத்தின் சாவியை எடுத்துள்ளார்.
காவலர்கள் எதிர்பாராத சமயத்தில், ராஜா தனது வாகனத்தை தனது மனைவியுடன் வேகமாக அவ்விடத்தை விட்டு ஓட்டிச் சென்றுள்ளார்.
உடனே காவல் ஆய்வாளர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்னால் விரட்டிச் சென்று, நிறுத்திய போது, அதனை ஓட்டிச் சென்ற ராஜா கட்டுப்பாட்டை இழந்து அவரும், பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷாவும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, அங்கு மருத்துவர்கள் உஷா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜா வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார்.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 2,000 பேர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் கலைந்து செல்ல மறுத்து கல் வீச்சில் ஈடுபட்டனர். ஒரு பெண் காவலர் உட்பட 11 காவலர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வேறு வழியின்றி தகுந்த எச்சரிக்கைக்கு பின், குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து, அவர்களை கலைந்து போகச் செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.
உஷா இறந்து போனது தொடர்பாக காவல் நிலையத்தில் உஷாவின் கணவர் ராஜா அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304(2), 336-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டேன்.
இது சம்பந்தமாக, திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணையின் முடிவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.