செய்திகள்

316 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

மாலை மலர்

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக 22,358 பணியிடங்கள் இதுவரை நிரப்பப்பட்டிருக்கின்றது.  இன்றையதினம் 316 புதிய உதவி மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிவதற்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குறிப்பிட்டதைப் போல, தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி உதவி மருத்துவர்கள் இல்லை என்ற நிலை இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கின்றது.  

இன்றைக்கு தமிழகத்திலே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மருத்துவமனையிலும், உதவி மருத்துவர் பணியிட காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டிருக்கின்றன. கிராமப்புற மக்களுக்குத் தேவையான உரிய சிகிச்சை அளிப்பதற்காக உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவர் பணியிடங்களெல்லாம் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் உதவி மருத்துவர்களாக இன்றைக்கு பணி ஆணை பெற இருக்கின்ற சகோதர, சகோதரிகள் தங்களுடைய கடமைகளை உணர்ந்து மக்களுக்கு சேவை புரிய வேண்டும்.  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றவர்கள் ஏழை, எளிய மக்கள்.  ஆகவே, அப்படிப்பட்ட மக்களுக்கு இதமாக பேசி, உரிய சிகிச்சை அளித்து, அவர்களுக்கு பூரண குணமடைய செய்வதற்குண்டான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல, தற்போது டெங்கு காய்ச்சல் படிப்படியாக குறைந்து கொண்டிருந்தாலும், ஆங்காங்கே இன்னும் ஒரு சில இடத்திலே இருப்பதாக தகவல் வருகின்றது. ஆகவே பணி ஆணை பெறுகின்ற உதவி மருத்துவர்கள் தங்கள் பகுதியிலே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ரத்த பரிசோதனை செய்து அதற்குண்டான சிகிச்சை மேற்கொள்ள  வேண்டும். பணி நியமனம் பெறுகின்ற உதவி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் / அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் பியாரே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.