செய்திகள்

காவிரி பிரச்சினையில் மு.க.ஸ்டாலின் ஊர்-ஊராக சென்று பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் - முதல்வர் பேச்சு

காவிரி பிரச்சினையில் மு.க.ஸ்டாலின் ஊர்-ஊராக சென்று பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Cauveryissue #MKStalin #CMEdappadiPalaniswami

மாலை மலர்

திருவாரூர்:

காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவாரூர் வன்மீகபுரத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோபால் எம்.பி. வரவேற்றார்.

கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி. 1970-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பேசிய கருணாநிதி, கர்நாடகம், ஹேமாவதி அணை கட்ட தமிழகம் எந்த மறுப்பும் தெரிவிக்காது என கூறி உள்ளார். தமிழகத்தின் உரிமையை அப்போதே விட்டுக்கொடுத்தவர் கருணாநிதி. காவிரியின் உப நதிகளில் பல்வேறு கட்டுமான பணிகளை தன்னிச்சையாக கர்நாடகம் தொடங்கியது. அதை தடுக்க எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.

இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக 1971-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்தியில் இந்திராகாந்தி பிரதமர். அந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவியது. இதனால் மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து 1972-ம் ஆண்டு, தன்னை காப்பாற்ற, தனது அரசை காப்பாற்ற, காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்று தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட விவசாய சங்க தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டது. அதன் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பின்னர் காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி 1991-ம் ஆண்டு கர்நாடகம், தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று இடைக்கால ஆணை வழங்கியது. அது அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகளுக்காக 80 மணி நேரம் உண்ணாவிரதத்தை ஜெயலலிதா மேற்கொண்டார். பின்னர் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் காவிரி நீர் பிரச்சினையில் சுணக்கம் ஏற்பட்டது.

ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அதைப்பற்றி கவலைப்படவில்லை. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்தது. 192 டி.எம்.சி. தண்ணீர், கர்நாடகம் வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது. அப்போது நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா குரல் கொடுத்தார்.

இதையடுத்து கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் அ.தி.மு.க. பங்கேற்றது. அப்போது, மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி பொறுப்பில் உள்ளதை பயன்படுத்திக்கொண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்ய வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது நடவடிக்கை எடுத்து இருந்தால் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீராவது கிடைத்து இருக்கும். ஆனால் தி.மு.க. கோட்டை விட்டு விட்டது.

ஆனால் இப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என்கிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. இருந்த போது அழுத்தம் கொடுத்து இருந்தால் இந்த பிரச்சினை தீர்ந்து இருக்கும். 11 ஆண்டு காலமாக விவசாயிகள் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டியது இருக்காது.

காவிரி நீர் பிரச்சினையின் இந்த நிலைக்கு காரணம் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட்டு இருந்தால் தமிழகத்துக்கு பாதுகாப்பு உரிமை கிடைத்து இருக்கும். தண்ணீர் கிடைத்து இருக்கும். அந்த தவறை மறைக்க ஸ்டாலின் இன்று ஊர், ஊராக நடைபயணம் மேற்கொள்கிறார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலம் முதல் காவிரி பிரச்சினையில் நமது உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து குரல் கொடுத்து வருவது அ.தி.மு.க. தான். விவசாயிகளின் உரிமையை பெற இறுதிவரை நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் காவிரி பிரச்சினையில் தி.மு.க. ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. ஆனால் அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்கவில்லை என்று ஊர், ஊராக, தெருத்தெருவாக சென்று மு.க.ஸ்டாலின் மக்களை சந்திக்கிறார். பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

தற்போது மு.க.ஸ்டாலின் என்னைப்பற்றியும், தமிழக அரசை பற்றியும், மானங்கெட்ட எடப்பாடி அரசு, எடுபிடி பழனிசாமி அரசு என்று கூறுகிறார். ஒரு கட்சியின் செயல் தலைவர், முன்னாள் துணை முதல்-அமைச்சர் இப்படி பேசுகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார். மனநிலை சரியாக இருந்தால் இப்படி பேச மாட்டார்.

இந்த ஆட்சி கவிழ வேண்டும். கட்சி உடைய வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். அது ஒருபோதும் நடக்காது. எனது தலைமையிலான அரசு ஒரு ஆண்டை கடந்து வெற்றி நடைபோடுகிறது. எதிலும் குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.

தி.மு.க.வில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அ.தி.மு.க.வில் விசுவாசம் உள்ளவர்கள் எந்த பதவிக்கும் வரலாம். அதனால் தான் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் முதல்-அமைச்சர் ஆகி உள்ளேன். நிச்சயம் நான் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் மன்னார்குடி ரங்கநாதன், விவசாய சங்கத் தலைவர்கள் சத்திய நாராயணா, சேது ராமன் மற்றும் திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆசைமணி நன்றி கூறினார்.

கூட்டத்தில் தஞ்சை எம்.பி.பரசுராமன், முன்னாள் டெல்லி பிரதிநிதி அ.அசோகன், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாப்பா சுப்பிரமணியன், பூபதி மாரியப்பன், மாவட்ட நிர்வாகிகள் பாப்பாத்திமணி, பாலதண்டாயுதம், முகஹமது அஸ்ரப், பொன் வாசுகிராம், நகர செயலாளர் மூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் டி.வி.பாஸ்கர், தழிழ் கண்ணன், பால் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலிய பெருமாள், இளவழகன், திருவாரூர் கூட்டுறவு சங்க தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுக்கூட்ட அரங்கில் லக்ஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. #Cauveryissue #MKStalin #CMEdappadiPalaniswami