செய்திகள்

உயிர் இழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: முதலமைச்சர் உத்தரவு

உயிர் இழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் சிறுவன் இளங்கோ சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வெட்டிக்காடு தேசிய நெடுஞ்சாலையில், மரம் முறிந்து விழுந்ததில், வேலுவின் மகன் பாண்டியன் அன்று உயிரிழந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகன் சபரி, பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, மழை தண்ணீர் குழியில் விழுந்து உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், அ. கலையம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகு என்பவரின் மகள் சரஸ்வதி மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஏ மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பனின் மகன் மாரியப்பன், முருகனின் மனைவி முனியம்மாள் ஆகிய இருவரும் பட்டாசு வெடித்ததில், தூண் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த மிக்கேலின் மகன் மரிய எப்ரேன் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.