காஞ்சி மடத்தின் 69-வது மடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1954-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1994-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டு, காஞ்சி பெரியவருக்கு பின் மடத்தினை சிறப்பாக வழிநடத்தினார். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மீக பணிகளோடு, சமூக முன்னேற்றப் பணிகளிலும் அக்கறை காட்டியவர்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மீக பக்தர்களுக்கும், காஞ்சி சங்கர மடத்தின் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நலக்குறைவால் திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், அவரை இழந்து வாடும் அவருடைய விசுவாசிகள் அனைவருக்கும் காஞ்சி சங்கர மடப் பணியாளர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
அவரது மறைவு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். அவர்களது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைந்து விட்டார் என்ற செய்தி நமக்கு மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஒரு தேசிய அக்கறை உடைய ஆன்மீகவாதியை இழந்திருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மோதல்களும், கட்டாய மத மாற்றங்களும் ஏற்பட்டபோது தானே களத்திற்கு சென்று இந்து மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அவர்களோடு இணக்கமாகவும், இதமாகவும் இருந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அனைத்து மதத்தை சார்ந்தவர்களையும் சமமாக மதிக்கக்கூடியவர், ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் ஒரு சமுதாயவாதியாகவும், தேசியவாதியாகவும் வாழ்ந்தவர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இச்செய்தி கேட்டு வேதனையும், துயரமும் அடைந்தேன்.
காஞ்சி ஜெயேந்திரர் மடாதிபதி என்பதைக் கடந்து கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை தொடங்கி சேவை நோக்கத்துடன் நடத்தி வந்தார். காஞ்சி மடத்தின் சார்பில் ஏராளமான தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வந்தார். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மனவருத்தம் அடைந்தேன். நான் அவரை நேரில் பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை பிரிந்துவாடும் காஞ்சி மடத்தின் நிர்வாகி களுக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆன்மீகப் பணிகள், கல்விப் பணிகள், சமூக சேவை பணிகள் போன்றவற்றில் தனது பணியை மிகச் சிறப்பாக சங்கர மடத்தின் மூலம் செய்து வந்தார். அடித்தட்டு மக்கள் நலனுக்காக தனது இடைவிடாதப் பணிகளை செய்து கொண்டிருந்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-
காஞ்சி சங்கர மடத்து மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை தனது 83-வது வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவருடனும், அவரது மடத்துடனும் திராவிடர் கழகத்திற்கு எவ்வளவு மலையளவு கருத்து கொள்கை வேறுபாடுகள் இருப்பினும்- திராவிடர் கழகம் அவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
எல்லோரின் பேரன்பிற்கும் பாத்திரமான காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இறைவனின் திருவடி நிழலில் முக்தி அடைந்தார் என்பது நமக்கு வருத்தத்தை அளித்த போதும், அவரது அருள் நமக்கு என்றும் இருக் கும் என்று எண்ணி அனைவரும் பக்தி மலர்களை தூவி வணங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.